கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று  கேட்டார்?”.  குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.


செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.


தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.
சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.


உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.


தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.


நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.


ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.
 


-அவ்வையார்