கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,


விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார்.  அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை! ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.
பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி. இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான்.
''ஐயா! நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான். விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்.
 



திருமூலர் தனது திருமந்திரத்தில் மனித உடலிலும், உடலுக்கு அப்பாலும் உள்ளது ஆன்மா ஒன்றே என்று கூறுகிறார். இதனை “கூடு விட்டுக் கூடு பாயக் கூடியது” என்றும் கூறுகிறார். அதாவது, ஒரு பிறவியில் நற்பெயர் எடுத்தவன் தனது உடலால் மட்டுமே இறக்கிறான். ஆனால் அவனது ஆன்மாவானது மற்றொருவரின் உடலில் ஏறி இந்த உலகிற்கு நல்லவற்றை செய்து கொண்டே தான் இருக்கிறது.


பாலை’ வைத்து ஆன்மாவை இவ்வாறு விளக்குகிறார் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது. ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. பாலை நாம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விட்டால் அது மறுநாளே கெட்டுப் போய்விடும். சரி, இந்தப் பாலை அப்படியே வைக்காமல் அதைக் காய்ச்சி உறை ஊற்றி வைத்துவிட்டால் மறுநாள் அது கெட்டுப் போகாமல் தயிராக வாழ்ந்து கொண்டிருக்கும்.தயிரைக் கடைந்து மோரும் வெண்ணையுமாக பிரித்துவிட்டால், அதே பால் அடுத்த நாளும் உருவகங்கள் மாறி வாழ்ந்து கொண்டிருப்பதாகிறது. வெண்ணெய் ஒரு வாரம் வரை கெடாது. அதன பின்பு கெட்டுப் போய் விடும். அந்த அழிவிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டுமானால் அதை நெய்யாக்கிவிட வேண்டும். நெய்யின் சிறப்பியல்பு என்னவென்றால் ‘உலகம் அழியும் வரை’
அதுவும் அழியாது.

            ஒரே நாளில் கெட்டுப் போகக் கூடியதான பாலுக்குள்ளேதான் யுக முடிவு வரை கெடாமலிருப்பதான நெய் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டால் பாலோடு சேர்ந்து அதுவும் கெட்டுப் போகிறது. ஆனால், அதை தனித்துப் பிரிந்துவிட்டால் நிரந்தரத்தன்மையைப் பெற்று விடுகிறது.

        இவ்வாறு, அழியக் கூடியதான தேகத்துக்குள் அழியாததாகிய ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவே ‘தான்’ என்று அதனை உணர்ந்து, தேகத்தோடு சம்பந்தப்படுத்தாமல் எவன் வாழ்கிறானோ, அவன் அழிவிலிருந்து அழிவற்றதுக்குப் போய் விட்டான் என்று பொருள். மற்றவர்களெல்லாம் தேகத்தையே தாங்கள் என்று கருதிக் கொண்டிருப்பதால் தேகம் அழியும் போது தாங்களும் அழிவதாக உணருகிறார்கள். ஆனால், ஆன்மாவை உணர்ந்தவர்களே தனக்கு மரணமே இல்லை என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.
ஆன்மாவை தங்களது எழுத்துக்களின் மூலம் இன்றும் மக்களின் மனதில் உலாவ விட்டு சென்றுள்ள மாமேதைகளில் சிலர்:
• ‘அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்’ அப்போது சாவுமங்கே அழிந்து போகும் என்று கூறிய பாட்டுக்கொரு பாரதி .
• ‘நேருவா மறைந்தார், இல்லை. நேர்மைக்குச் சாவே இல்லை’.
‘ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய் எங்கள் ராஜா இல்லை மார்பினில் சூட’.
‘சாவே உனக்கு ஒரு நாள் சாவு வந்து சேராத’ என்று நேருவின் இறங்கல்பாவில் கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் நேருவின் நேர்மையை இன்றும் பறைசாற்றுகின்றன.
• ‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் துற்றுவார் துற்றட்டும் தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கின்ற துணிவு கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே இருந்தது.
• இந்த ஆன்மா வீரத்தை இறுதியாக ஒரு பாடலில் தெரிவிக்கிறார்.
“நான் நிரந்தரமானவான் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”.