கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,


ஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு?’ என்று கடையில் உள்ள  பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு?’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்து “எட்டு ரூபாய்” என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன் ‘எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்’ என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.  
                                        
            அந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். தான் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால் ‘பிறரைப் பற்றி’ எண்ணியிருந்திருக்கிறான்.


நாம் எல்லோரும் அந்தச் சிறுவனைப் போல் எண்ணினால், நாம் வாழ்வதற்குரிய மகத்தான இடத்தைப் பெறுவோம். அக்கறையையும், பண்பட்ட தன்மையையும் காட்டுங்கள். பிறரைப் பற்றி எண்ணுதல் என்பது ஒரு அக்கறையான மனப்பாங்கைக் காட்டும்.

 

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்
தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து
செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும்
வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதன் எஜமானன் கூறினான்.

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும்
அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது
எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது.

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யவேண்டும்..!!

துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்து விட்டது. தண்ணீருக்குள் கை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி. தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள். துடித்து தேளைத் தவறி, தண்ணீரில் விட்டார் துறவி. மறுபடியும் கருணையோடு தூக்கினார் மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை. கரையிலிருந்து ஒருவர் கேட்டார். சுவாமி, தேள் தான் கொட்டுகிறது… திரும்பத் திரும்ப ஏன் கொட்டுப்படுகிறீர்கள். விட்டுவிட வேண்டியது தானே.

துறவியின் பதில்… “கொட்டுவது தேளின் இயற்கை குணம். காப்பாற்றுவது மனிதனின் இயற்கை குணம். அதனுடைய இயல்பை அது விடாத போது என்னுடைய இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்”.

துறவிக்கு இருந்த இந்த குணத்தை வள்ளுவன் ஒரு படி மேல் சென்று இந்த குணநலன்களே ஒரு “மாளிகையின் தூண்கள்” என்று தனது சான்றாண்மை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

குறள்:
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

பொருள்: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!!!


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

 
விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

ஒருவர் தனது இரு மாணாக்கரை அழைத்து இந்த உலகிலேயே மிகமிக நல்லவனை அழைத்து வரும் படி கூறினார். மற்றவரிடம் மிக மிக கெட்டவனை அழைத்து வரக்கூறினார்.

இரண்டுபேரும் நன்றாக தேடிவிட்டு திரும்பி வந்தனர்.

நல்லவனை தேடச்சென்றவன் திரும்பி வந்து சொன்னான். ஐயா. எவ்வளவோ தேடிவிட்டேன். இந்த உலகில் ஒரு நல்லவனும் எனக்கு கிடைக்கவில்லை.

கெட்டவனை தேடச்சென்றவன் திரும்பி வந்து சொன்னான். ஐயா. எவ்வளவோ தேடிவிட்டேன். இந்த உலகில் ஒரு கெட்டவனும் எனக்கு கிடைக்கவில்லை.

குரு சொன்னார்.

உலகில் இரண்டும் கலந்தே இருந்திருக்கிறது. இருக்கிறது. இருக்கும்.
உங்கள் மனநிலையைப் பொறுத்தே மற்றவரை நல்லவரா கெட்டவரா என எடைபோடுகிறீர்கள்.

நீதி: கெட்டவன் எவரிடத்திலும் நல்லவரை காணமாட்டான். நல்லவன் எவரிடத்திலும் கெட்டதை காணமாட்டான்.

புத்தரின் திருவுருவச் சிலை முன்பு ஊதுவத்திகளை ஏற்றி வழிபடும் வழக்கம் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள். அவள் எங்கே சென்றாலும் தன்னோடு தங்கத்தாலான ஒரு புத்தரின் சிலையைய் எடுத்துச் செல்வாள். போகும் இடமெல்லாம் புத்தரின் சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுவாள். ஆனால் அந்த ஊதுவத்தியின் நறுமணத்தை அடுத்தவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணம் கொண்டவள். அதனால், ஊதுவத்தியில் இருந்து ஒரு குழாயைய் புத்தரின் மூக்குக் குழாய்க்கு பொறுத்தி விட்டாள். இதனால் நாளாக நாளாக தங்க மூக்கு கறுத்துவிட்டது. இது சுயநலம் பற்றி ஜென் மதத்தினர் சொல்லும் கறுப்பு மூக்கு புத்தர் கதை.
 
நாமும் சில சமயங்களில் இந்த பெண்மணியைய் போலத்தான் தாம் செய்வதுதான் சரி என்றும் தான் செய்கின்ற செயல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது அதனால் அவர்கள் பயனடையக்கூடாது என்ற சுயநலத்துடனும் வாழ்கிறோம். இது போன்ற செயல்களை செய்கையில் புத்தருக்கு மூக்கு கறுத்தது போல் சில சமயங்களில் நமக்கும் தீமையே விளைகின்றன தவிர நன்மை அல்ல..

நீதி : உதவி பெறுபவர் மகிழ்ச்சியைவிட, கொடுப்பவர் மகிழ்ச்சியே நிலையானது!!!